காதல் விவகாரம்.. திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த வாலிபருக்கு நடந்த கொடூரம்

உள்ளூரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த போது, காதல் விவகாரத்தில் வாலீபர் மீது அந்த கொடூர சம்பவம் நிகழ்த்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன். இவருடைய மகன் தமிழரசன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. தமிழரசன் வெளியூர் எங்காவது சென்று இருக்கலாம் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைத்து இருந்தனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் தமிழரசன் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து எம்.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தமிழரசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சங்கரபாண்டி என்கிற அருண் (22), மணிகண்டன் (20), ரஞ்சித்குமார் (24), ஜெயசங்கர் (22), முத்துப்பாண்டி (22), செல்வம் (25), சுரேஷ் (42) ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தவிர மற்ற 6 பேரை கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தமிழரசன் தனது தாத்தா சங்கரலிங்கத்துடன் வசித்து வந்துள்ளார். ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த குடும்பத்துக்கும், தமிழரசனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதை தொடர்ந்து தமிழரசன் சேலத்துக்கு சென்று அங்கு வேலை செய்து வந்தார். உள்ளூரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள தமிழரசன் வந்த போது, காதல் விவகாரத்தில் ஏற்பட்ட விரோதம் காரணமாக அவரை கொலை செய்துள்ளனர்” என்று அவர் கூறினார். தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.






