முகநூல் மூலம் மலர்ந்த காதல்: தறித்தொழிலாளியை திருமணம் செய்த இலங்கை பெண்...!

முகநூல் மூலம் மலர்ந்த காதலால் தறித்தொழிலாளியை இலங்கை பெண் திருமணம் செய்தார்.
முகநூல் மூலம் மலர்ந்த காதல்: தறித்தொழிலாளியை திருமணம் செய்த இலங்கை பெண்...!
Published on

சேலம்,

ஓமலூர் அருகே உள்ள பஞ்சுகாளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 27), விசைத்தறித்தொழிலாளி. இவருக்கும், இலங்கையில் பருத்திதுறை பகுதியை சேர்ந்த நிஷாந்தினி (25) என்ற பெண்ணுக்கும் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமல் வலைத்தளத்தில் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் காதலரை கரம் பிடிப்பதற்காக நிஷாந்தினி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது தாயாருடன் சுற்றுலா விசாவில் சேலம் வந்தார். பின்னர் சரவணன், நிஷாந்தினி ஆகிய இருவரும் பஞ்சுகாளிப்பட்டியில் உள்ள கோவிலில் கடந்த 7-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்வதற்காக ஓமலூரில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அதிகாரிகள் பெண்ணுக்கு தடையில்லா சான்று வேண்டும் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி விட்டனர். இதற்கிடையில் நிஷாந்தினியின் சுற்றுலா விசா விரைவில் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் சரவணன், நிஷாந்தினி ஆகியோர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் நிஷாந்தினி அங்கிருந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். அதில், நான் பஞ்சுகாளிப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரை முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நான் எனது கணவருடன் இந்தியாவிலேயே இருக்க வேண்டி உள்ளதால் பதிவுத்துறை அலுவலகத்தில் திருமண பதிவு செய்ய தடையில்லா சான்றிதழை அதிகாரிகள் கேட்கின்றனர். எனவே போலீஸ் துறை மூலம் தடையில்லா சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com