காதல் தோல்வி... கடலில் குதித்த டிரைவர் - தந்தையின் தகவலால் காப்பாற்றிய போலீசார்

அனந்தகிருஷ்ணன் நேற்று அதிகாலையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு சென்றார்.
கடல்
Published on: 

சென்னை,

காதல் தோல்வியால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகனை போலீசார் காப்பாற்றினார்கள்.

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன் (வயது 25). இவரது தந்தை சந்திரஜித், கேரள போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்கிறார். அனந்தகிருஷ்ணனுக்கு பெரிய அளவில் படிப்பு ஏறவில்லை. அவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒரு வரை திருவண்ணாமலை கோவிலுக்கு அனந்தகிருஷ்ணன் காரில் அழைத்து சென்றார். திருவண்ணாமலைக்கு சாமி கும்பிட சவாரிக்கு அழைத்து சென்ற அனந்தகிருஷ்ணன், அந்த இளம்பெண்ணிடம் மனதை பறிகொடுத்தார்.

பட்டினப்பாக்கம் கடற்கரை

அனந்தகிருஷ்ணனின் காதலை அந்த பெண்ணும் ஏற்றுக் கொண்டார். அவர்களுக்குள் தொடர்ந்து காதல் நீடித்தது. அந்த இளம்பெண்ணை அனந்தகிருஷ்ணன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதை ஐதராபாத் இளம்பெண்ணிடம் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தபோது அவர் அதை ஏற்கவில்லை. அன்றோடு காதலை முறித்துக் கொள்வதாக கூறிய அந்த பெண் அனந்தகிருஷ்ணனிடம் பேசுவதையும் தவிர்த்துவிட்டார்.

காதலை மறக்க முடியாத அனந்தகிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தததாக தெரிகிறது. இந்த நிலையில் தனது தந்தை உள்பட உறவினர்களுக்கு சென்னை பட்டினப்பாக்கம் கடலில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் அனுப்பினார்.

தற்கொலை

அனந்தகிருஷ்ணன் நேற்று அதிகாலையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் தற்கொலை செய்யப் போவதாக அனுப்பிய தகவலை தெரிந்து பதறிப்போன அவரது தந்தை சந்திரஜித் உடனடியாக சென்னை போலீசுக்கு தகவல் கொடுத்திருந்தார்.

போலீசார்

அதனால் போலீசார் உஷாரானார்கள். பட்டினப்பாக்கம் போலீசார் விரைந்து செயல்பட்டு கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற அனந்தகிருஷ்ணனை காப்பாற்றினார்கள். அவருக்கு அறிவுரை வழங்கி அவரது தந்தையோடு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை பொறுத்தமட்டில் அனந்தகிருஷ்ணனை அவரது காதல் கைவிட்டாலும், அவரது தந்தையின் பாசம் அவரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com