

மயிலாடுதுறை,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் மயிலாடுதுறை அருகே ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது 17 வயது சிறுமி ஒருவருடன் அந்த வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருச்செந்தூரில் திருமணம் செய்து கொண்டு கும்பகோணத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த வாலிபருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அந்த சிறுமி தனது காதல் கணவருடன் மொபட்டில் தாய் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் மதுபோதையில் இருந்தார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சென்றபோது மொபட் நிலைதடுமாறியதில் இருவரும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர்.
இதையடுத்து சிறுமி தனது தாயாரை செல்போன் மூலமாக வரவழைத்து அவருடன் ஆட்டோவில் தனது கணவரை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மொபட்டில் தாய் வீட்டுக்கு சென்ற சிறுமி, அங்கு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அவருடைய தாய் கூச்சல் போட்டு கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து 'போக்சோ' வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை திருமணம் செய்த வாலிபரை கைது செய்தனர். காதல் திருமணம் செய்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.