காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்


காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
x

அன்புராஜ் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு சென்று மனைவியை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார்.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் அன்புராஜ் (வயது 24). பெயிண்டரான இவர் கடந்த 2023-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பிரித்திகா (20) என்ற பட்டதாரி இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

பின்னர் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். அவர்களிடம் உறவினர்கள் பேசி காதல் தம்பதியரை மீண்டும் சேர்த்து வைத்தனர். தொடர்ந்து அவர்கள் சொந்த ஊரில் இருக்க வேண்டாம் என்று கருதி நெல்லை சந்திப்பில் உள்ள மீனாட்சிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

பிரித்திகா தனது தாய் மற்றும் குடும்பத்தினரிடம் அடிக்கடி செல்போனில் பேசியது அன்புராஜிக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று வழக்கம்போல் அன்புராஜ் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மனைவி பிரித்திகாவிடம், ‘எதற்காக உனது தாய், சகோதரனிடம் செல்போனில் பேசினாய்?’ என்று கூறி தகராறு செய்தார்.

இதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அன்புராஜ், பிரித்திகா அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தைச் சுற்றி நெரித்து கீழே தள்ளினார். பின்னர் வீட்டில் காய்கறி வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியால் பிரித்திகா கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அன்புராஜ் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு சென்று மனைவியை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். உடனே மாநகர மேற்கு துணை போலீஸ் கமிஷனர் பிரசன்னகுமார் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். இறந்த பிரித்திகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புராஜை கைது செய்தனர்.

கைதான அன்புராஜ் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

பிரித்திகாவை காதலித்து கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்தேன். பின்னர் ஒரு மாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தோம். தொடர்ந்து கடந்த மே மாதம் 2 பேரும் சேர்ந்து நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்துக்கு வந்து குடியேறினோம்.

சமீபத்தில் பிரித்திகாவின் தந்தை இறப்புக்கு பிறகு குறிப்பிட்ட அளவு பணம் பிரித்திகாவுக்கு வழங்கப்பட்டது. அதை செலவு செய்தது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. பிரித்திகா அவருடைய பெற்றோருடன் பேசுவதால் தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது என்பதால் பேசக்கூடாது என்று கூறினேன்.

இது தொடர்பாக எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் பிரித்திகாவை கொலை செய்தேன். பின்னர் தப்பி செல்வதற்காக, மனைவி உடலை வீட்டில் போட்டு கதவை வெளியே பூட்டி விட்டு, கோவில்பட்டிக்கு பஸ்சில் ஏறி பயணம் செய்தேன். பின்னர் மன வேதனையுடன் குடும்பத்தாரிடம் செல்போனில் பேசினேன். அவர்களது அறுவுறுத்தலின் பேரில் போலீசில் சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story