

சென்னை,
வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தகுதித்தேர்வில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின்படி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் இந்தியாவில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட டாக்டராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தகுதித்தேர்வில் (எப்.எம்.ஜி.இ.) தேர்ச்சி பெறுவது சட்டப்படி கட்டாயம் ஆகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கு இந்தியாவில் டாக்டராக பணியாற்ற தற்காலிக அல்லது நிரந்தரப் பதிவுச்சான்றிதழ் தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்படும்.
இந்த தேர்வை ஆண்டுக்கு 2 முறை அதாவது ஜூன் மற்றும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் (என்.பி.இ.எம்.எஸ்.) நடத்துகிறது. அதன் படி, ஜூன் மாதங்களுக்கான தகுதித் தேர்வு அந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. அதை எழுத 37 ஆயிரத்து 428 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 36 ஆயிரத்து 280 பேர் எழுதினர்.
அவர்களுக்கான தேர்வு முடிவு வெளியானது. அதில் 4 ஆயிரத்து 635 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதாவது தேர்வு எழுதியவர்களில் 12.78 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இது முந்தைய ஆண்டுகளுடனான தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. உதாரணமாக 2025-ல் ஜூன் மாதத்தில் 18.6 சதவீதம், டிசம்பரில் 23.9 சதவீதம் என்ற அளவில் இருந்த தேர்ச்சி சதவீதம் தற்போது 12.78 ஆக குறைந்துள்ளது.
தேர்வின் கடினத்தன்மை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதால் தேர்ச்சி சதவீதம் குறைந்திருப்பதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் (வெளிநாட்டுப் பிரிவு) குற்றஞ்சாட்டுகிறது. மேலும் இந்த தேர்வு அமைப்பை மறு சீரமைக்க வேண்டும். 2026 ஜூன் மாத தகுதித் தேர்வுக்கு ஒரு முறை விதிவிலக்காக தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க பரிசீலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் வைத்துள்ளனர்.