மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடிய நிலையில் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; மீனவர்களுக்கு எச்சரிக்கை
Published on

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் கூறும்போது, தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டிய (கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமுட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். மத்திய வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக, வங்க கடல் பகுதியில் இன்று மத்திய வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை முதல் 14ந்தேதி வரை வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்க கடல் பகுதி, ஒரிசா-மேற்கு வங்க கடலோர பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை, இடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதே போல் இன்று முதல் 14ந்தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடை இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com