

சென்னை,
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இதனை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கிடையே, தற்போது எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐ.ஓ.சி நிறுவனம், எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வாடகை வழங்காத நிலையில், இந்த வாடகை பாக்கி ரூ.50 கோடி வரை சென்றுள்ளது. இதனால், வாடகை பாக்கி வழங்காததைக் கண்டித்து, எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) அதிகாரிகள், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், நிலுவைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து லாரி உரிமையாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.
எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.