சந்திர கிரகணம்: திருச்செந்தூர் கோவிலில் நடை அடைப்பு

சரகணத்தையொட்டி, உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் நடை இன்று அடைக்கப்படுகிறது.
தூத்துக்குடி,
இயற்கையாக ஏற்படும் வானியல் நிகழ்வுகளில் கிரகணமும் ஒன்றாகும். இதில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என இரண்டு வகை கிரகணங்கள் உண்டு. இந்த கிரகணங்கள் ஏற்படும் போது அது மனிதர்களின் வாழ்வில் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அந்த வகையில், இன்று முழு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இரவு 9:56 க்கு துவங்கி 1:26 வரை சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. கிரகண நேரங்களில் கோவில்களை மூடிவிடுவது வழக்கம். இந்த நிலையில், சந்திர கிரகணத்தையொட்டி, உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் நடை அடைக்கப்படுகிறது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவில் நடை இன்று பிற்பகல் 2 மணிக்கு அடைக்கப்பட்டு, நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, பவுர்ணமி தினம் மற்றும் வார விடுமுறை என்பதால், இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.






