வேலூர் அருகே லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாலை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
வேலூர் அருகே லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு.
விபத்து
Published on: 

வேலூர்,

வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் பகுதியில் காலி மது பாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் லாரி தலைகீழாக கவிழ்ந்தது. சாலையில் கண்ணாடி துண்டுகள் சிதறியதால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலி மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த தனியார் சொகுசு பேருந்து (ஆம்னி பேருந்து), எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் பலமாக மோதியது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நடுரோட்டிலேயே தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

சிதறிய கண்ணாடி துண்டுகள்

லாரி கவிழ்ந்த வேகத்தில், அதில் கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான காலி மது பாட்டில்கள் உடைந்து சாலைகளில் சிதறின. இதனால் அந்த பகுதி முழுவதும் கண்ணாடி துகள்களாக காட்சியளித்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

3 கி.மீ தூரத்திற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து

சாலையில் கண்ணாடிகள் சிதறி கிடந்ததால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. விபத்துக்குள்ளான லாரியை மீட்டதோடு, சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த மீட்பு பணியின் காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

போக்குவரத்து சீரமைப்பு

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாலை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X