

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
அமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கோல்ட்ரிப் இருமல் மருந்து குறித்து கூறியதாவது:-
பொதுவாக குற்றச்சம்பவங்கள் எங்கு நடந்ததோ அந்த மாநில காவல்துறையினரே நடவடிக்கையினை எடுப்பார்கள். அக்டோபர் 1 ஆம் தேதி நிகழ்வு நடைபெற்றவுடன் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் கோல்ட்ரிப் சிரப் என்ற மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். அதில் டைஎதிலீன் கிளைகால் (Diethylene Glycol, DEG) அளவு 1% கூட இருக்க கூடாது என்ற நிலையில் 48% அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக மத்திய பிரதேச அரசுக்கு தெரியபடுத்தப்பட்டது.
ஆனால் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுகாதார அலுவலர்கள், மத்திய அரசின் அலுவலர்கள் இது நல்ல மருந்து என்று குறிப்பிட்ட நிலையிலும் தமிழ்நாடு அரசுதான் இது நச்சுத்தன்மை அதிகம் உள்ள மருந்து என்று கண்டுபிடித்தது. மற்ற மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கும் இதன் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ சேவை கழகம் (TNMSC) இந்த மருந்தினை கொள்முதல் செய்வதில்லை, தனியாரும் இந்த மருந்தினால் பாதிக்கப்படக்கூடாது என்று உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 3.10.2025 அன்றே சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உற்பத்தி நிறுத்துவதற்கான ஆணை கொடுக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் அவர்கள் பதில் வழங்க வேண்டும் இல்லையென்றால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் 7.10.2025 அன்று குற்றநடவடிக்கைக்கான அறிவிப்பு கொடுக்க சென்றபோது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். இருந்தாலும் தமிழ்நாடு அரசின் காவல்துறையின் உதவியுடன் மத்திய பிரதேச அரசு காவல்துறை அந்த உரிமையாளரை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அந்த நிறுவனம் இனிமேல் இயங்காத வகையில் முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மருந்து உற்பத்தி செய்யும் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் கட்டாயமாகும். கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசின் மருந்து ஆய்வு செய்யும் குழுவினர் எந்த விதமான ஆய்வையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த மருந்தினை ஆய்வு செய்யாத 2 முதுநிலை மருந்து ஆய்வாளர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவ்வளவு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்த காரணத்தினால் பல்வேறு மாநிலங்களில் ஏற்படவிருந்த உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 100 நாடுகளுக்கு 12,000 கோடியிலிருந்து 15,000 கோடி வரை மருந்து ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 397 மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளது. தற்போது நடந்த இந்த பிரச்சனை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகும், இதனை அரசியல் ஆக்கி பொது விவாதங்களில் அதிகமாக விவாதிப்பது என்பது நாகரீகமாக இருக்காது என்பதை எதிர்கட்சித் தலைவர் புரிந்துகொள்ளவேண்டும். 2015 முதல் 2021 வரை சி.ஏ.ஜி. (CAG) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்து பதில் சொல்ல வேண்டியர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆவார். என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.