அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பானில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் செல்கிறார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பானில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்
Published on

சென்னை,

ஜப்பானில் புற்றுநோய் சிகிச்சை மற்றும் மேலாண்மை நெறிமுறைகளை அறிந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதார செயலாளர் பி.செந்தில் குமார் ஆகியோர் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் செல்கின்றனர்.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

"புற்று நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் ஜப்பான் முன்னிலையில் உள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் பின்பற்றும் சிகிச்சை நெறிமுறைகளை தமிழகத்தில் செயல்படுத்த உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70,000-80,000 புற்றுநோய்கள் கண்டறியப்படுகிறது. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் அதை முழுமையாக குணப்படுத்த முடியும்.

எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, புற்று நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான மருத்துவக் கட்டமைப்பை அறிய, சுகாதாரத்துறை குழு ஜப்பான் செல்கிறது. ஜப்பானில் புற்றுநோய் மேலாண்மையை கண்காணித்து தமிழகத்தில் சிகிச்சை திட்டத்தை செயல்படுத்த டாக்டர்கள் குழுவுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவி வருகிறது" என்று கூறினார்.

தேசிய சுகாதார பணி ஒதுக்கீடு குறித்து பேசிய அவர், நிலுவையில் உள்ள ஒதுக்கீட்டை வழங்க மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி தயாராக இருப்பதாகவும் கூறினார்.

மேலும், மதுரை எய்ம்ஸ் குறித்து கூறும்போது, மத்திய அரசிடம் வளர்ச்சி பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கல்லூரியில் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியுள்ளன என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com