சிலைக்கடத்தல் வழக்கு; தமிழக அரசின் அரசாணை ரத்து, பொன். மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சிலைக்கடத்தல் வழக்கு; தமிழக அரசின் அரசாணை ரத்து, பொன். மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில், சிலை கடத்தல் விவகாரத்தில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டியது இருப்பதால், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. இதனையடுத்து தமிழக அரசின் பதிலும் தாக்கல் செய்யப்பட்டு ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

அதிரடி உத்தரவு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறுகிறார். இதற்கிடையே சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றும் வழக்கு தொடர்பாக தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று ஐகோர்ட்டு நேற்று அறிவித்தது. பொன். மாணிக்கவேல் விசாரணை தொடர வேண்டும் என்பதே கோரிக்கையாக இருந்தது. இன்று தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்டு, சிபிஐக்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணையை சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் ஒரு நேர்மறையான நகர்வாக இன்றுடன் ஓய்வுபெறும் பொன். மாணிக்கவேலை ஒருவருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தும் உத்தரவிட்டது.

இன்றுடன் ஓய்வு பெறும் பொன். மாணிக்கவேல் மேலும் ஒரு ஆண்டு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாநில போலீசும், சிபிஐயும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். விசாரணை தொடர்பான அறிக்கையை வேறு எந்தஒரு அதிகாரியிடமும் அவர் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் நேரடியாகவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவரை சிறப்பு அதிகாரியாக ஓராண்டு நியமனம் செய்வதற்கு தேவையான பணியை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். சிலைக்கடத்தல் பிரிவு ஐஜியாக இருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் படிகள் என்னவோ அதனைத் தொடரவேண்டும் என்று ஐகோர்ட்டு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

சிலைக்கடத்தல் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளையும், இனி பதிவாகும் வழக்குகளையும் அவரே விசாரணை செய்ய வேண்டும், அவர் நீதிமன்றத்தில் மட்டும் அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு கூறியுள்ளதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com