

கட்டப்பஞ்சாயத்து
தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தபோது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து அவதூறு கருத்தை தெரிவித்ததாக அவர் மீது காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் கடந்த 2017-ம் ஆண்டு தாடி கார்த்திகேயன் என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அதன் தலைவர் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். பொதுமக்கள் நிலத்தை அபகரிக்கின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியது, எங்கள் கட்சிக்கும், திருமாவளவனுக்கும் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்விதமாக உள்ளது என்று கூறியிருந்தார்.
யாரும் ஆஜராகவில்லை
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட காஞ்சீபுரம் மாஜிஸ்திரேட்டு, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி தமிழிசை சவுந்தரராஜனுக்கு சம்மன் அனுப்பினார். அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கை பலமுறை விசாரணைக்கு பட்டியலிட்டும் இருதரப்பினர் சார்பிலும் யாரும் ஆஜராகவில்லை. கடந்த ஆகஸ்டு மாதமும், கடந்த 22-ந் தேதியும் வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்தும், அதன்பின்னரும் இருதரப்பிலும் யாரும் ஆஜராகவில்லை. எனவே, இந்த வழக்கு ஆவணத்தின் அடிப்படையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கிறேன்.
விளம்பர வழக்கு
தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், செக் மோசடி சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்குக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று காஞ்சீபுரம் கோர்ட்டு அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது நகைப்புக்குரியதாகும். என்ன வழக்கு என்று தெரியாமலேயே கீழ்கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும், தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்த கருத்தால் மனுதாரருக்கு என்ன பாதிப்பு என்பதை விளக்கவில்லை. தமிழிசை சவுந்தரராஜன் என்ன பேசினார் என்பதற்குரிய ஆதாரத்தை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியோ, அதன் தலைவர் தொல்.திருமாவளவனோ தன்னை இந்த அவதூறு வழக்கு தொடர ஒப்புதல் அளித்தனர் என்பதற்கும் ஆதாரம் இல்லை. மொத்தத்தில் விளம்பரத்துக்காக தமிழிசை சவுந்தரராஜன் மீது காஞ்சீபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பேச்சுரிமை
மேலும், அரசியல் அமைப்பு சட்டம் பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளிட்ட உரிமைகளை ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ளது. அதேநேரம், அந்த உரிமையும் சில கட்டுப்பாடுகளுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவதூறு வழக்கை தொடர்ந்து, அரசியல் விளம்பரத்தை பெற எதிர்மனுதாரர் முயற்சித்துள்ளார். எனவே, அவர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.