தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

தேசிய கல்விக் கொள்கைக்கான நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில்,'மறுமலர்ச்சி இயக்கம்' என்ற அமைப்பின் நிர்வாகியான கோவை வே.ஈஸ்வரன் என்பவர், தாக்கல் செய்திருந்த மனுவில், "கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.

ஆனால், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் இந்த ஆண்டுக்கான சேர்க்கை இதுவரையிலும் தொடங்கவில்லை. எனவே 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறி்த்த விவரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செவ்வாய் கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "கல்வி உரிமைச் சட்டத்தில் 25 சதவீத ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் 60 சதவீத தொகையை மத்திய அரசும், 40 சதவீத தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும். 2021ம் கல்வியாண்டு முதல் 2023ம் கல்வியாண்டு வரை எந்த நிதியும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. 100 சதவீத தொகையை மாநில அரசுதான் வழங்கியது" என்று கூறினார்.

மேலும் மத்திய அரசு நிதி ஒதுக்காததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காததால் பள்ளிகள் பாதிக்கப்படுவார்கள் என நீதிபதிகள் குறிப்பிட்ட போது, இதே போல மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என கோர்ட்டு கேள்வி எழுப்ப வேண்டும் என கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார்.

அப்போது மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் பாபு, அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

மேலும் அந்த நிதியை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உரிய வகையில் வழங்க வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கைக்கான நிதியுடன் இதை தொடர்பு படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

1 More update

Next Story