அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஆரம்ப கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக்கோரி மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக திமுக அமைச்சர் கே.என். நேரு ரூ.1,020 கோடி வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டி, வழக்குப்பதிவு செய்யக்கோரி அமலாக்கத்துறை, தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. வழக்குப்பதிவு செய்யக்கோரி இரண்டு முறை அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யுமாறு அதிமுக எம்.பி. இன்பதுரை, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்த சூழலில், அமலாக்கத்துறை புகாரை அடிப்படையாக வைத்து உடனடியாக அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி இன்பதுரை, சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை கடந்த மாதம் 7-ம் தேதி தாக்கல் செய்திருந்தார்

அதில், ஊழல் எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக அமலாக்கத்துறை தெளிவாக கூறியுள்ளதாகவும் இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென புகாரளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என மனுவில் குற்றம்சாட்டி இருந்தார். எனவே, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்து நியாயமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது ஆரம்ப கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தநிலையில், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அமலாக்கத்துறை அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com