

சென்னை,
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொலைதூரக்கல்வி திட்டத்தின் கீழ் ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்தன. கடந்த காலங்களில் அரியர் வைத்திருந்த மாணவர்களும் இந்த ஆன்லைன் தேர்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் முறையாக பதிவு செய்யாத 117 பேர் முறைகேடு செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவை அமைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவின் விசாரணையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.