மதுரை: கஞ்சா கடத்திய 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை; ரூ.1 லட்சம் அபராதம்

மதுரை சிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே, அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 28 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
கடந்த 8.7.2021 அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவது சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின்படி காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான 28 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதைக் கடத்தி வந்த சிவகங்கை மாவட்டம் மேலராங்கியத்தைச் சேர்ந்த கணேசன் மகன் முருகன்(எ) லோடுமுருகன் (வயது 42), மதுரை அனுப்பானடி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ஜோதிபாசு மகன் ரவிக்குமார்(எ) தவளைரவி(32), மதுரை அண்ணாநகரை சேர்ந்த பாண்டியன் மகன் சத்தியேந்திரன்(32) ஆகிய 3 பேரை கைது செய்து கடத்தி வந்த கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் மற்றும் பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (28.5.2025) சாட்சிகள் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை கடத்திய குற்றவாளிகளான முருகன்(எ) லோடுமுருகன், ரவிக்குமார்(எ) தவளைரவி, சத்தியேந்திரன் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட கீரைத்துறை காவல் துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.






