மதுரை: சாலையில் சிதறி கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்.. போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்

மதுரையில் சாலையில் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை: சாலையில் சிதறி கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்.. போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாமரத்துபட்டி விலக்கு பகுதியில் நேற்று தேனியில் இருந்து மதுரை நோக்கி அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பணத்துடன் சென்றுள்ளது. இந்த வாகனத்திலிருந்து 500 ரூபாய் நோட்டுகள் சிதறி பறந்து நெடுஞ்சாலையில் விழுந்ததாகவும், சாலையில் ஆங்காங்கே 500 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வழியாக சென்ற பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் இதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பொதுமக்கள் போட்டி போட்டு சாலையில் கிடந்த பணத்தை அள்ளி சென்றனர். அதேபோல வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை அள்ளினர். கையில் கிடைத்த ரூபாய் நோட்டுகளுடன் பொதுமக்கள் அங்கிருந்து அவசர, அவசரமாக ஓடிவிட்டனர். இது தொடர்பான காட்சி அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த 500 ரூபாய் நோட்டுகள் அவ்வழியாக சென்ற வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததா? அல்லது வீசப்பட்டதா? என தெரியவில்லை. இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பணம் குறித்து இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். புகார் அளித்தாலும் பொதுமக்களால் அள்ளி செல்லப்பட்ட பணத்தை மீட்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அத்துடன் சாலையில் சிதறிய ரூபாய் நோட்டுகள் எவ்வளவு என்பதும் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். உசிலம்பட்டியில் சாலையில் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com