மக்களவை தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை துவங்கியுள்ளது மத்திய அரசு - சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன.
மக்களவை தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை துவங்கியுள்ளது மத்திய அரசு - சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு
Published on

சென்னை,

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை. இதனால், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியது.

இதையடுத்து மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டிய 5 ஆண்டுகளுக்கு பின் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இன்று தொடங்கின. எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ள எல் அண்ட் டி நிறுவனம் இன்று வாஸ்து பூஜையுடன் கட்டுமான பணிகளை துவக்கி உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 33 மாதங்களில் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், எம்.பி. சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்டுமான பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஒரு ரகசிய திட்டத்தைப்போல எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவுக்கும் திட்டம் துவங்கும் விழாவுக்கும் இடையே 5 ஆண்டுகள் சாதனையை தேசம் அறிந்திருக்கும். பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக மூன்று முறை தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர், மதுரை எய்ம்ஸ் பணிகளை துவக்கி வைக்காததற்கான காரணம் என்ன?. தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தேர்தல் நேர கண்துடைப்பு நாடகம். மக்களை ஏமாற்றும் நடவடிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com