மதுரை ஆதீனம் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்


மதுரை ஆதீனம் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்
x
தினத்தந்தி 10 July 2025 6:00 PM IST (Updated: 10 July 2025 6:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மதுரை ஆதீனம் ஆஜராக 2-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.

சென்னை,

உளுந்தூர் பேட்டையில் நடந்த விபத்தை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விபத்தையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், கார் ஓட்டுநர், நம்பர் பிளேட் இல்லாத வாகனம் மூலம் திட்டமிட்டு குறிப்பிட்ட மதத்தினர் மோதியதாக கூறினார். இதன் பின்னர், ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது பற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அதில், ஆதீனத்தின் கார்தான் மற்றொரு கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இரு சமூகங்களிடையே மோதலை ஏற்படுத்த ஆதீனம் முயற்சிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன், போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மதுரை ஆதீனம், விசாரணைக்கு நேரில் ஆஜராக போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் ஆதீனம் ஆஜராகவில்லை.

விசாரணைக்கு காணொலியில் ஆஜராவதாக மதுரை ஆதீனம் தரப்பு வைத்த கோரிக்கையை காவல்துறை ஏற்க மறுத்துள்ள நிலையில், நேரில் ஆஜராக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் கடந்த ஜூலை 5-ந் தேதி ஆதீனம் ஆஜராக 2-வது முறை சம்மன் அனுப்பப்பட்டது.

இருப்பினும் அவருக்கு பதிலாக மடத்தின் செயலாளர் செல்வகுமார் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். மேலும் மதுரை ஆதீனத்துக்கு வயது முதிர்வு காரணமாக காவல் நிலையம் வரமுடியவில்லை எனவும் ஆஜர் ஆக சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

1 More update

Next Story