மதுரை அழகர் கோவிலில் ஆடி தேரோட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை அழகர் கோவிலில் பவுர்ணமி அன்று ஆடி தேரோட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அழகர் கோவிலில் ஆடி தேரோட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
Published on

மதுரை,

மதுரை அழகர் கோவிலில் பவுர்ணமி அன்று ஆடி தேரோட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அழகர்கோவிலில் முழு நிலவு நாளில் ஆடித் தேரோட்டம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:-

மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா, ஆடி பிரமோத்சவ விழா புகழ்பெற்றது. சித்திரை திருவிழாவில் கள்ளழகர், மதுரை நகரில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

ஆடி பிமோத்சவா விழா பத்து நாள் நடைபெறும். இவ்விழாவில் முக்கியமானது ஆடித் தேரோட்டம். முழு நிலவு நாளில் இந்த தேரோட்டம் நடைபெறும். தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து நிலைக்கு வரும். அரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு ஆடி பிரமோத்சவ விழாவில் நடைபெறும் தேரோட்டத்தை நேரில் பார்ப்பதற்காக மதுரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.

எனவே, கொரோனா நிபந்தனைகள் மற்றும் முழு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அழகர்கோவிலில் முழு நிலவு நாளில் ஆடித் தேரோட்டம் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது கொரோனா 2-ம் அலை பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம். எனவே, மனுதாரர் கோரும் நிவாரணம் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com