சித்திரை திருவிழா கோலாகலம்.. குவிந்த பல லட்சம் பக்தர்கள்.. குலுங்கியது மதுரை

300க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் பசியாற உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சித்திரை திருவிழா கோலாகலம்.. குவிந்த பல லட்சம் பக்தர்கள்.. குலுங்கியது மதுரை
Published on

மதுரை,

மதுரை மாநகரில் நடைபெறும் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சிறப்புமிக்க திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 17-ந் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் ஆரம்பமானது. கடந்த 28-ந் தேதி மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.

இதற்கிடையே அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகராக வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலையில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக் கம்பு ஏந்தி வந்த கள்ளழகரை வழிநெடுக பக்தர்கள் திரண்டு தரிசித்தனர். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, அழகரை வர்ணித்து பாட்டுப்பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ் கோர்ஸ், அவுட்போஸ்ட், வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். வீதி எங்கும் பக்தர்கள் குவிந்து தரிசித்தனர்.

நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். அங்கே திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடந்தன. நள்ளிரவில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தொடர்ந்து தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தபடி ஆயிரம் பொன்சப்பரத்தில் காட்சி தந்தார். அதன்பின் வைகை ஆற்றில் எழுந்தருள புறப்பட்டார்.

இன்று காலை 5.35 மணிக்கு மேல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதையொட்டி வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன் கூட்டியே வெள்ளிக்குதிரையில் அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அருளினார். இதை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம். தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்திருந்தனர்.

இதனால் மதுரை விழாக்கோலத்துடன் குதூகலித்தது. கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய அழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பக்தர்கள் மீது பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கியபோது பக்தர்கள் செம்புகளில் சர்க்கரையை நிரப்பி சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடிக்காணிக்கை செலுத்தினார்.

இந்நிலையில் பகல் 12 மணிக்கு கள்ளழகர் ராமராயர் மண்டபம் சென்றார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். வேடம் அணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கு எழுந்தருள்கிறார். அங்கு நாளை அதிகாலை ஏகாந்த சேவையும், மதியம் தேனூர் மண்டபத்தில் மண்டுக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளன.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தசாவதாரக் காட்சி, நாளை நள்ளிரவு 12 மணி முதல் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய நடைபெற உள்ளது. இதில் பெருமாளின் பத்து அவதாரங்களையும் பக்தர்கள் தரிசிக்கலாம். மறுநாள் காலை மோகினி அவதாரத்தில் வீதி உலா வரும் அழகர், மே 4-ம் தேதி அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளி, பின்னர் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் விடைபெற்று மீண்டும் அழகர்மலைக்கு திரும்புவார்.

லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், மதுரை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் தின விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, சிறப்புப் பேருந்துகள் மற்றும் குடிநீர், சுகாதார வசதிகளைத் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் விரிவாக செய்துள்ளது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவத்தையொட்டி மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டுள்ளநிலையில், கொளுத்தும் வெயிலில் பக்தர்களின் தாகத்தை தீர்க்க பல இடங்களில் நீர் மோர் வழங்கப்படுகின்றன. மேலும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் பசியாற உணவு வழங்கப்பட்டு வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com