மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் தண்ணீர் திறப்பு எப்போது..? வெளியானது தகவல்

மதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. 23-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது.
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் தண்ணீர் திறப்பு எப்போது..? வெளியானது தகவல்
Published on

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதற்கிடையே உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா நடைபெறும்.

இதற்காக வைகை அணையில் போதுமான நீர்இருப்பு இருந்தால் தண்ணீர் திறப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உள்ளது. இதனால் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 19-ந்தேதி மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், தண்ணீர் வேகமாக ஆற்றில் செல்லும் வகையில் இரவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 19-ந்தேதி மாலை 6 மணி முதல் 23-ந்தேதி காலை 6 மணி வரை மொத்தமாக 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு, படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com