

மதுரை
மதுரையில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் வெளியாகி உள்ளது.
மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை முதல்-அமைச்சர் விஜய் இன்று துவக்கி வைக்கிறார். இதற்காக இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் பகல் 11 மணிக்கு மதுரை வருகிறார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இதனைத்தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார். 'ரோடு ஷோ'வாக பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி வழியாக செல்ல உள்ளார்.
அதற்கு ஏற்ப அந்த பகுதிகளில் இரும்பு தடுப்புகள் மற்றும் சவுக்கு கம்புகள் மூலம் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதன்பின்னர் மதியம் 12 மணியளவில் மதுரை அரசு மருத்துவமனையை சென்றடைகிறார். அரசு மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில் குத்துவிளக்கு ஏற்றி பேசுகிறார். விழாவின்போது மதுரை மாவட்டத்தில் பிற அரசு மருத்துவமனைகளில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தன்கைகளால், தங்க மோதிரங்களை வழங்க இருக்கிறார். அதனைத்தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டுக்கு சென்று, அந்த மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவிக்க இருக்கிறார்.
அங்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களை சந்தித்து நலம் விசாரிக்கிறார். முதல்-அமைச்சர் கைகளால் எந்தெந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன? என்ற விவரம் முன்கூட்டியே, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் உள்ள செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் இந்த திட்டம் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. விழாவையொட்டி மதுரை அரசு மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் நேற்று இரவில் நிறைவு பெற்றன. முதல்-அமைச்சர் வருகையையொட்டி அரசு மருத்துவமனை கட்டிடங்களுக்கு பல நிறங்களில் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றன. மேலும், கருத்தரங்க கூடமும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
இந்த விழா நிறைவு பெற்றதும், முதல்-அமைச்சர் விஜய், புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தினை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதன்பின்னர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். இதனை தொடர்ந்து உள்ளூர் அமைச்சர்கள், த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்பு மாலை 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதனை தொடர்ந்து அவர் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.