மதுரை: பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் கணவன் - மனைவி மீது குண்டாஸ்

இந்த வழக்கு மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.
மதுரை: பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் கணவன் - மனைவி மீது குண்டாஸ்
Published on: 

மதுரை,

மேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற பணம் இரட்டிப்பு மோசடியில் கைது செய்யப்பட்ட ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணம் வசூலித்து மோசடி

மதுரை மாவட்டம் மேலூரில் எப்.கியூ.எல். (FQL) என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தின் செயலி மூலம் ஆன்லைனில் முதலீடு செய்தால், 2 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என்று கூறப்பட்டது. அதோடு பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெறுவதற்கு முகவர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்த முகவர்கள், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம மக்களை குறிவைத்து, மூளைச்சலவை செய்து, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தனர். அதோடு ஒரு சிலருக்கு. முதலீட்டு தொகை இரட்டிப்பாக கிடைத்தது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தனர்.

மதுரை மத்திய சிறை

இந்தநிலையில், அந்த தனியார் நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதனால், பணத்தை முதலீடு செய்த மக்கள், முகவர்களின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் மேலூரில் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே, மோசடி வழக்கில் மேலூர் அருகே உள்ள கட்டையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், பிரியதர்ஷினி ஆகிய தம்பதியினர் கடந்த மாதம் 7-ந்தேதி திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தனர். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டம்

45 நாட்களில் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தென்மாவட்டங்களில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக கூறப்படும்நிலையில் ரூ.1000 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை மற்றும் மேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற பணம் இரட்டிப்பு மோசடியில் கைது செய்யப்பட்ட ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com