மக்கள் கட்டணம் செலுத்தி பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலை தரமாக இருப்பதில்லை - மதுரை ஐகோர்ட்டு அதிருப்தி

ஒரு வாரத்தில் பாலத்தை முழுவதுமாக சீரமைத்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை ஐகோர்ட்டு
கோப்புப்படம்
Published on: 

மதுரை,

மக்கள் கட்டணம் செலுத்தி பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலை தரமாக இருப்பதில்லை என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பாலம் சேதம்

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை-தூத்துக்குடி இடையேயான தேசிய நெடுஞ்சாலையானது, அந்த வழியாக செல்லும் தாமிரபரணி ஆற்றை கடக்கிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே இருவழியிலும் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலம் கடந்த 2012-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. அந்த பாலத்தின் உறுதித்தன்மைக்கு 100 ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2017-ம் ஆண்டில் அந்த பாலத்தில் 10 அடி நீளத்திற்கு கான்கிரீட் விரிசல் ஏற்பட்டு ஓட்டை விழுந்தது. பாலம் பலம் இழந்து உள்ளதால் எந்தநேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பாலம் கட்டியதில் முறைகேடு நடந்து உள்ளது. அந்த பாலத்தை இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்டவும், சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தரமாக இருப்பதில்லை

இந்த வழக்கை ஏற்கனவே ஐகோர்ட்டு விசாரித்தபோது, நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டண கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளீர்கள். இந்த பாலத்தை சீரமைப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகளை இலவசமாக மக்கள் பயன்படுத்தலாம் என்று கூறி வழங்கவில்லை. அந்த சாலைகளை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு இருக்கும்போது சாலை தரமாக இருப்பதில்லை என தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

காப்பாற்றும் முயற்சி

மேலும் நீதிபதிகள் கூறுகையில், 'மேற்கண்ட பாலம் சேதமடைந்ததற்கு கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்றதுதான் காரணம் என்பதை ஏற்க இயலாது. இந்த வழக்கை பொறுத்த வரை தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்ட இயக்குனர், ஒப்பந்ததாரர் ஆகியோரை காப்பாற்றும் முயற்சிதான் நடக்கிறது' என தெரிவித்தனர்.

விசாரணை முடிவில், ஒரு வார காலத்தில் பாலத்தை முழுவதுமாக சீரமைத்து அதுகுறித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் இதுதொடர்பாக நிபுணர் குழுவை இந்த கோர்ட்டு அமைக்கும் என அறிவுறுத்தி விசாரணையை ஒத்திவைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com