

மதுரை,
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29). இவர் மீது நகை திருட்டு புகாரை மதுரையை சேர்ந்த பேராசிரியை நிகிதா கடந்த ஆண்டு ஜூன் மாதம் அளித்தார். அந்த புகாரின்பேரில் விசாரணை நடத்துவதற் காக அஜித்குமாரை அழைத்துச் சென்ற போலீசார் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அஜித்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கில் தனிப்படை போலீசார் ராஜா, ஆனந்த், சங்கர மணிகண்டன், பிரபு, கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்தது. சில மாதங்களில் கூடுதல் குற்றப்பத்திரி கையும் தாக்கலானது.
அதில், அஜித்குமார் கொலையில் அப்போதைய மானாமதுரை துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போலீஸ்காரர் இளையராஜா ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் மீதும் கொலை வழக்கு பதிவானது. சண்முகசுந்தரம் உள்பட 4 பேரும் கைதாகி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இதற்கிடையே டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்பட 4 பேரும் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் எங்களை நீதிமன்ற காவலில் வைக்கும்படி கீழ் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி முருகன் நேற்று பிறப்பித்தார். அதில் கூறியிருந்ததாவது:- காவலாளி அஜித்குமார் இறந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்போம் என மனுதாரர்கள் 4 பேரும் எழுதி கொடுத்த பத்திரத்தை, ஜாமீன் பத்திரத்திற்கு இணையாக கருத முடியாது. மேலும் மனுதாரர்கள் அனைவரும் காவல்துறையினர் என்பதை கருத்தில் கொள்ளும்போது, அவர்கள் சாட்சிகளை மிரட்டுவதற்கோ அல்லது சாட்சியங்களை கலைப்பதற்கோ அதிக வாய்ப்பு உள்ளது.எனவே மனுதாரர்கள் மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, அவர்களை விசாரணை கோர்ட்டு (மாவட்ட கோர்ட்டு) நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தது சரிதான்.
அஜித்குமார் இறந்த உடன் பதிவான வழக்கின் அடிப்படையில் தனிப்படை போலீசார் 6 பேர் அப்போதே கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் சிறையில் பல மாதங்களாக உள்ளனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டுவின் கட்டுப்பாட்டில் இருந்த சிறப்பு படையினரால் அஜித்குமார் தாக்கப்பட்டு, காவல் மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இதனால் ஏற்கனவே சிறையில் இருக்கும் 6 போலீஸ்காரர்களுக்கும், இந்த மனுதாரர்கள் 4 பேருக்கும் இடையே கூட்டுச்சதி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதன் அடிப்படையில் நீதியை நிலைநாட்டவும், நியாயமான விசாரணை நடைபெ றுவதை உறுதி செய்யவும், கொலை குற்றச்சாட்டு பதிவு செய்த பிறகு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் உள்பட 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டது.பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவு 528-ன் கீழ் இந்த ஐகோர்ட்டுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி மனுதாரர்களை சிறையில் அடைத்த உத்த ரவை ரத்து செய்யும்படி கோர முடியாது. வேண்டுமானால் ஜாமீன் கேட்டு உரிய கோர்ட்டினை நாடலாம்.