

மதுரை,
திறமையானவர்களை அரசு வக்கீல்களாக நியமிக்க விரும்பிய காலம் மலையேறிவிட்டது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'நாகர்கோவில் பெருவிளையைச் சேர்ந்த வக்கீல் ஜெய்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் பதிவான ஒரு வழக்கில் குற்றம்சாட்டப் பட்ட நபர்களுக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆஜராக தடை விதித்து நாகர்கோவில் வக்கீல்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் நாகர்கோவிலில் இருந்து நெல்லை கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜராகி வரும் அரசு வக்கீல் முறையாக செயல்படவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க பார்கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக இருந்தவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வக்கீல்கள் அச்சமின்றி செயல்பட வேண்டும். குற்றவியல் வழக்கை நடத்துவது தொடர்பாக அரசு தரப்பு வக்கீலிடம் கேள்வி கேட்கும் அதிகாரம் பார்கவுன்சிலுக்கு வழங்கப்பட்டால் அது சட்டத்தின் ஆட்சிக்கே முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துவிடும்.
அரசு வக்கீல் மீது காவல்துறை ஆதிக்கம் செலுத்தாது. அரசு தரப்பு வக்கீலின் நடத்தையில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு அதை நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டால் மட்டுமே அவர் மீது பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியும். ஆட்சியில் இருப்பவர்கள் திறமையான அரசு வக்கீல்களை நியமிக்க விரும்பிய காலம் மலை யேறிவிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களின் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்குகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தங்கள் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் உள்ளது.
அரசு வக்கீல் அச்சம் இல்லாமல் செயல்பட்டு நீதியை நிலை நாட்ட வேண்டும். ஆவணங்களை முழுமையாக படித்து திறம்பட வழக்கை நடத்த வேண்டும். காவல்துறை கூறுவதை அப்படியே கிளிப்பிள்ளை போல அவர் திரும்ப சொல்லக்கூடாது. இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் கோரிக்கையை ஏற்க வேண்டியதில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.