

மதுரை,
திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவில், தூத்துக்குடி மாவட்டம் சங்கர் நகர், சங்கரராமேஸ்வரம் மற்றும் வைகுண்டபதி பெருமாள் கோயில்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பாதுகாக்க பல்வேறு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, முறையான நடவடிக்கைகளை முழுமையாக எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் இதற்கு முன்பாக இதுகுறித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுகளையும் முழுமையாக நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்றும், அதேபோல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வரும் அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகள் மெதுவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான 40,000 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
எனவே கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கோயில் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற 2 குழுக்களை நியமிக்க வேண்டும். கோயில் நிலங்களை மீட்பது குறித்த உத்தரவுகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.