விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு; மூதாட்டி கொலை வழக்கு ஜாமீன் ரத்து: மதுரை ஐகோட்டு கிளை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்மமுனீஸ்வரன், கோவில்பட்டியில் மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்றவர்.
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு; மூதாட்டி கொலை வழக்கு ஜாமீன் ரத்து: மதுரை ஐகோட்டு கிளை உத்தரவு
Published on

தூத்துக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்மமுனீஸ்வரன், கோவில்பட்டியில் மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்றவர். இந்த தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது. குறிப்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் தினமும் நேர்நின்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஜாமீனில் வெளிவந்த தர்மமுனீஸ்வரன், தூத்துக்குடி நீதிமன்றத்தில் கையெழுத்திட சென்ற காலகட்டத்தில், விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஜாமீன் காலத்தின்போது அடுத்தடுத்த குற்றங்களில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டி, மூதாட்டி கொலை வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு; "குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவு மற்றும் ஜாமீன் ஆகியவற்றை ரத்து செய்து" உத்தரவிட்டனர்.

இதே கோரிக்கையை முன்வைத்து மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை, அரசு மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு முடித்து வைத்தனர். இதன் மூலம், ஜாமீனில் வெளியே இருந்த தர்மமுனீஸ்வரன் மீண்டும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com