மதுரை: வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறையில் மர்ம நபர் நுழைந்ததாக புகார் - பரபரப்பு

மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறையில் மர்ம நபர் நுழைந்து நகல் எடுத்ததாக எழுந்த புகாரால் பரபரப்பு நிலவி வருகிறது.
மதுரை: வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறையில் மர்ம நபர் நுழைந்ததாக புகார் - பரபரப்பு
Published on

மதுரை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 18-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மதுரை தொகுதியில் மட்டும் சித்திரை திருவிழா தேரோட்டத்தையொட்டி கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மதுரை தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மதுரை மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டுவந்து அறையில் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவில் கலெக்டர் அனுமதியின்றி பெண் ஒருவர், அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறைக்குள் சென்றதாகவும், அவர் அந்த அறையில் இருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் தகவல் பரவி திடீர் சர்ச்சையானது. இதை அறிந்ததும் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெங்கடேசன் தனது ஆதரவாளர்களுடன், மதுரை மருத்துவக்கல்லூரிக்கு வந்தார்.

பெண் ஒருவர் அத்துமீறி சென்றது பற்றி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளிடம் கேட்டதற்கு முறையாக பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு மைய அதிகாரிகளுக்கும், வேட்பாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் ஏராளமானோர் மதுரை மருத்துவக்கல்லூரி முன்பு திரண்டனர். திடீரென்று சாலையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதே போல் அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் ஆதரவாளர்களுடன் அங்கு வந்தனர். பத்திரிகையாளர்களும் திரண்டனர்.

கலெக்டர் வந்து விளக்கம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். பின்னர் மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் அங்கு வந்தார்.

பின்னர் விசாரணையில், அறைக்குள் புகுந்தது ஒரு பெண் தாசில்தார் என தெரியவந்தது. அவர் அந்த அறையில் இருந்து சில ஆவணங்களை எடுத்துச்சென்று ஜெராக்ஸ் எடுத்துவிட்டு, மீண்டும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட பெண் தாசில்தாரிடம், கலெக்டர் விசாரணை நடத்தினார். அதே நேரத்தில் வேட்பாளர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களும் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டதால் நள்ளிரவிலும் அங்கு பரபரப்பு நீடித்தது. அந்த பெண் தாசில்தார் விசாரணைக்காக பின்னர் அழைத்துச் செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com