

மதுரை,
மதுரை நகைக்கடை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான நிஷாந்தை வரும் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் தனிஷ்க் நகைக்கடையின் புதிய ஷோரூம் உள்ளது. இந்த நகைக்கடைக்குள் கடந்த 12-ம் தேதி அதிகாலை புகுந்த வாலிபர், கடையில் இருந்து ரூ. 21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றார்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், பழங்காநத்தம் அருட்பெரும் ஜோதி தெருவை சேர்ந்த சுரேஷ் மகனான யூடியூபர் நிஷாந்த் (வயது 25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளையில் நிஷாந்தின் காதலியும், மதுரையை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சி (வயது 23) என்பவருக்கும், நிஷாந்தின் தந்தை சுரேஷ்-க்கும் (வயது 50) தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மீனாட்சி, சுரேசை போலீசார் கைது செய்தனர்.
மேலும், மதுரை மாடக்குளம் கண்மாய் கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ தங்க, வைர நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த நிஷாந்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதனை தொடர்ந்து மதுரை நகைக்கடை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான நிஷாந்தை போலீசார் நேற்று கைது செய்தனர். 5 நாட்களாக தலைமறைவாக இருந்த நிஷாந்தை தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகே செஷம்பட்டி பகுதியில் போலீசார் கைது செய்தனர். ஆம்னி பஸ்சில் பயணம் செய்த நிஷாந்தை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில், தருமபுரியில் கைது செய்யப்பட்ட நிஷாந்தை போலீசார் மதுரைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். இதையடுத்து, நிஷாந்துக்கு மருத்துவ பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், அவரை மதுரை தாமரைப்பட்டியில் உள்ள நீதிபதிகள் குடியிருப்புக்கு அழைத்து வந்த போலீசார், நிஷாந்தை ஜே.எம்.3 நீதிபதி சங்கீதா முன் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து நிஷாந்தை வரும் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, நிஷாந்த் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, நகைக்கடை கொள்ளையில் 15 கிலோ நகைகளில் இதுவரை 11.7 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.