

மதுரை,
மதுரையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வாலிபர் வீட்டில் 7 மணி நேரம் சோதனை நடந்தது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் இரவில் பரபரப்பு நிலவியது.
மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.21 கோடி தங்க, வைரநகைகள் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் கொள்ளையன் தப்பிச் சென்றதாக கூறப்படும் சாலைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஒவ்வொன்றாக சோதனை செய்தனர். அதில் அவன் மாடக்குளம் சாலை வழியாக பெண்களுக்கான இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த கடையின் பின்புற சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள ஒரு தெருவை சேர்ந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த வாலிபரின் வீட்டில் சோதனை செய்வதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் அந்த வீட்டில் புகுந்து 7 மணி நேரமாக நேற்று இரவில் அதிரடி சோதனை நடத்தினர்.
வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகள் மற்றும் வெளிப்பகுதி, மாடியில் உள்ள அறைகள் என அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த தெரு பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் கொள்ளை போன நகைகள் எதுவும் கிடைக்கவில்லை. சந்தேகப்படும் அந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், கடைசியாக வீட்டுக்கு வந்து சென்ற பின்பு, பல மணி நேரமாக வீட்டுக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறுகையில், சந்தேகப்படும் வாலிபர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவர் சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களை பதிவு செய்து வந்தார். மேலும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வைத்து சாகசங்கள் செய்து அதனை வீடியோவாகவும் பதிவிட்டு வந்தார். கொள்ளை நடந்த நகைக்கடைக்கு அவர் வேறு வேறு நாட்களில் 3 முறை வந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
ஒவ்வொரு முறை வரும் போதும் மாறு வேடங்களில் வந்து நகைக்கடையை நோட்டமிட்டு உள்ளார். அவரது புகைப்படங்களை, இப்போதுள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவர் தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வாலிபர் வீட்டிலும் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் கொள்ளையன் யார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இளைஞர் வீட்டில் இருந்து 2 பைகளில் ஆவணங்கள், பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் நகைக் கடை கொள்ளை தொடர்பாக மாடக்குளம் கண்மாயில் போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.