

மதுரை அருகே லாரியில் இருந்து இரும்பு ராடு தவறி விழுந்த விபத்தில் ஜல்லிக்கட்டு வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள சித்தாலங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன் (28 வயது), அவரது நண்பர் ராகுல் (26 வயது). இவர்கள், பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இருவரும் மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். சோழவந்தான் அருகே இரும்பு பொருட்களை ஏற்றி சென்ற கனரக லாரி அவர்கள் பைக்கை முந்தி சென்றது.
அப்போது, எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து கீழே சரிந்து விழுந்த பெரிய இரும்பு ராடு அவர்களது பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கோபாலகிருஷ்ணன், ராகுல் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.