

சென்னை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோவில் வளாகத்தில் அதிகளவில் கடைகள் இருப்பதாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறி இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை பார்வையிடுவதற்கு சென்ற அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாக கடைகளை அகற்றுவது குறித்து ஆராய குழு அமைக்கப்படும். அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதியில் மேற்கூரையும், மேற்பரப்பில் குறுக்காக இருந்த சில கல் உத்திரங்களும் இடிந்து விழுந்துள்ளன. 4 சிறப்பு என்ஜினீயர்களை கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு மண்டப பகுதியில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்யப்படும். ஆயிரங்கால் மண்டபத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள், என்று கலெக்டர் வீரராகவராவ் கூறியிருந்தார்.
இப்போது இவ்விவகாரம் தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகள் அகற்றப்படும் என்று கூறிஉள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளை குளிர்ச்சியூட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.