கடைகளால் தீ விபத்து நேரிட்டது என தெரியவந்தால் கடைகள் முழுமையாக அகற்றப்படும்: ஓ.பன்னீர்செல்வம்

கடைகளால் தீ விபத்து நேரிட்டது என தெரியவந்தால் கடைகள் முழுமையாக அகற்றப்படும் என ஓ. பன்னீர்செல்வம் கூறிஉள்ளார்.
கடைகளால் தீ விபத்து நேரிட்டது என தெரியவந்தால் கடைகள் முழுமையாக அகற்றப்படும்: ஓ.பன்னீர்செல்வம்
Published on

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளது. இந்த பகுதியின் இருபுறங்களிலும் 45 கடைகள் இருந்தன. இந்த கடைகளில் கடந்த 2-ந் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின. வீரவசந்தராயர் மண்டபம் கடுமையான சேதமடைந்தது. அதன் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. மேலும் அந்த மண்டபத்தில் இருந்த 32 தூண்களில் 19 தூண்கள் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்து குறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி விபத்தால் சேதமடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்து சீரமைக்க என்ஜினீயர்கள் மற்றும் ஸ்தபதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் போலீசாரின் விசாரணையும் தீவிரமடைந்துள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்து வருகின்றன. அங்குள்ள ஒரு கடையை கடைசியாக அடைத்துவிட்டு வந்த கடைக்காரர் ஒருவர், திருஷ்டி கழிப்பதற்காக கற்பூரம் காட்டி உள்ளார். அந்த கற்பூரத்தின் தீ துகள்கள் தான் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் மின்கசிவு தான் தீ விபத்திற்கு காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட இடங்களை இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து சேத மதிப்பு மதிப்பிடப்பட்டு வருகிறது. 6 மாத காலத்திற்குள் இயல்பு நிலை கொண்டு வரப்படும். மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள கடைகளால்தான் பாதிப்பு என்றால், அனைத்தும் கடைகளும் முழுமையாக அகற்றப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தனி தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். உலகப்புகழ் பெற்ற திருக்கோயில்களில், தீயணைப்பு நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக கோயில்களில், இடையூறு ஏற்படும் வகையில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்லும் பொருட்கள் சோதனையிடப்படும் என்று கூறிஉள்ளார்.

இனிமேல், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆலய பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com