மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது..!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!
Published on

மதுரை,

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இதில் குறிப்பிடத்தக்கது சித்திரை திருவிழா ஆகும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று (23-ந் தேதி) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் சுவாமி சன்னதியின் முன்உள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் கொடிமரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விழா நடக்கும் நாட்களில் தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் கற்பகவிருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்ளிட்ட வாகனங்களில் 4 மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

வருகிற 30-ம் தேதி பட்டாபிஷேகமும், மே 1-ந் தேதி திக்விஜயமும் நடக்க உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2-ந்தேதி நடக்கிறது. மறுநாள் (3-ந் தேதி) மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. 4-ந் தேதி சித்திரைத் திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.

அதனை தொடர்ந்து 3-ந்தேதி கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அழகர் மலையில் இருந்து புறப்பாடாகி மதுரை வரும் கள்ளழகர் 5-ந் தேதி அதிகாலையில் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com