பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு..! 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் முதல் பரிசு

காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 860 காளைகள் பங்கேற்றன.
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு..! 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் முதல் பரிசு
Published on

மதுரை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போது நிறைவடைந்தது.

காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 860 காளைகள் பங்கேற்றன. இதில் 23 காளைகளை பிடித்த சின்னபட்டி தமிழரசன் முதல் பரிசை வென்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை பிடித்த பாலமேடு மணி என்பவர் இரண்டாவது பரிசை வென்றார். 15 காளைகளை பிடித்த பாலமேடு ராஜா மூன்றாவது இடம் பிடித்தார்.

நெல்லை பொன்னர் சுவாமி கோவில் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு உரிமையாளருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காவல் ஆய்வாளர் உட்பட 35 பேர் காயமடைந்தனர். 10 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த ராஜன் என்பவர் மாடு முட்டியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com