

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த பறக்கும் படையினர் மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில போலீசார் உதவியுடன் அதிரடி சோதனைகள் நடத்தி, உரிய ஆவணமின்றி முறைகேடாக கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க நடத்தப்பட்டுவரும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் அதிமுக நிர்வாகியிடமிருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.26.24 லட்சம் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதைபோல் புதுக்கோட்டை மாவட்டம் கோல்டன் நகர் பகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.43 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாவட்டம் தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 557 கிராம் தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.