ஒரு நாள் மழைக்கே குளமாக மாறிய மதுரை!

வெள்ள நீர் வடியாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அத்தியாவசியத் தேவைகளுக்காக கூட வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
ஒரு நாள் மழைக்கே குளமாக மாறிய மதுரை!
மழைநீர்
Published on: 

மதுரை,

மதுரையில் நேற்று ஒரு நாள் பெய்த திடீர் கனமழையால் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மதுரையில் கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 4 முதல் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த திடீர் அதி கனமழையால், ஒரே நாளில் மதுரை மாநகரமே குளம்போல் காட்சியளித்தது.

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

மதுரை மாவட்டத்தின் செல்லூர் பகுதியில் 50 அடி மற்றும் 60 அடி சாலைப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் நள்ளிரவில் பெரும் அவதிக்குள்ளாகினர். இதேபோல், மாட்டுத்தாவணி காய்கறி சந்தை, கோரிப்பாளையம், அண்ணா நகர் மற்றும் பெரியார் பேருந்து நிலையம் போன்ற தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.

போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு

மழை காரணமாக நகரின் முக்கிய போக்குவரத்து நரம்பான கருடன் பாலம் மற்றும் ரெயில்வே தரைப்பாலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கின. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வெள்ள நீர் வடியாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அத்தியாவசியத் தேவைகளுக்காக கூட வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

போர்க்கால நடவடிக்கை

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில், மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ரூ.23 கோடியில் நிரந்தரத் திட்டம்

மதுரை ரெயில் நிலையம் மற்றும் மாசி வீதிகள் போன்ற பகுதிகளில் மழைக்காலங்களில் நிரந்தரமாக தண்ணீர் தேங்குவதைத் தடுக்க, ரூ.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய வடிகால் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அக்டோபர் 26-ந்தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com