மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டப்பணியை விரைவுபடுத்த வேண்டும்

மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதை திட்டப்பணியை விரைவுப்படுத்த வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.
மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டப்பணியை விரைவுபடுத்த வேண்டும்
Published on

மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதை திட்டப்பணியை விரைவுப்படுத்த வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

அகல ரெயில்பாதை

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கடந்த 2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான 144 கி. மீ. அகல ரயில்பாதை திட்டப்பணிக்கு ரூ. 800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப்பணி தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பா.ஜ.க. அரசு இத்திட்ட பணியை முற்றிலுமாக முடக்கியது.

இதையடுத்து பலமுறை வலியுறுத்தியதின் பேரில் திட்டப்பணிக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் மீள விட்டானில் இருந்து தூத்துக்குடி வரையிலான 18 கி.மீ. தூர ரயில் பாதை பணி மட்டும் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து இத்திட்ட பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தை கூறி மத்திய அரசு பணியை முடக்கியது.

பெரும் அதிர்ச்சி

இந்தநிலையில் திடீரென பொருளாதார ரீதியாக இந்த ரயில் பாதை லாபகரமாக இருக்காது என்ற காரணத்தை கூறி திட்டம் கைவிடப்படும் என அறிவித்தது.

இது தென் மாவட்ட மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நான் பிரதமருக்கும், ரயில்வே மந்திரிக்கும் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதை உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் கடிதம் எழுதினேன். மத்திய அரசின் நடவடிக்கை விருதுநகர் தொகுதியை புறக்கணிப்பதாக உள்ளது.

வலியுறுத்தல்

தற்போது தமிழக அரசு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த 78 சிறப்பு அலுவலர்களை நியமித்துள்ள நிலையில் ரயில்வே அமைச்சகம் மேலும் தாமதிக்காமல் மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் ராகுல் தலைமையான இந்தியா கூட்டணி ஆட்சி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com