

மதுரை,
மதுரை மாவட்டம் திருமோகூர் அருகே பெருங்குடியை சேர்ந்தவர் 49 வயதான அன்னமயில். கணவர் உயிரிழந்த நிலையில் மகனுடன் வசித்து வந்துள்ளார். அன்னமயிலுக்கும், அவரது கொழுந்தன் மற்றும் நாத்தனார் குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக இடத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அன்னமயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் இருதரப்பினரிடையே தகராறு மேலும் அதிகரித்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 18-ந்தேதி அன்னமயிலுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் அன்னமயிலை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தனது சகோதரியுடன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த அன்னமயிலை ஒரு கும்பல் கல்லால் தாக்கியுள்ளது. அன்னமயில் தப்பி ஓட முயன்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்று கடப்பாறையால் தாக்கி உள்ளனர். அன்னமயிலை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரியிடம், கடப்பாறையை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அடுத்த சில நிமிடங்களில் கம்பி மற்றும் செங்கற்களால் அன்னமயிலின் தலையில் பலமாக தாக்கி அவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஒத்தக்கடை காவல்துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.