மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக் கூறியதை திரும்ப பெறுகிறேன் நித்யானந்தா பதில் மனு

ஐகோர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து "மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக் கூறியதை திரும்ப பெறுகிறேன்" என நித்யானந்தா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. #TamilNews #Nithyananda #MaduraiAdheenam
மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக் கூறியதை திரும்ப பெறுகிறேன் நித்யானந்தா பதில் மனு
Published on

சென்னை,

மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தா தன்னைத்தானே அறிவித்துக்கொண்டதை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில், மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மதுரை ஆதீனத்துக்குள் செல்ல நித்யானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கிற்கு நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்தார். அதில், நான் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி. கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டேன். ஒருமுறை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் இளைய ஆதீனமாகவே தொடர்வார். அந்த நியமனத்தை எவராலும் ரத்துசெய்ய முடியாது என்று கூறியிருந்தார்.

இந்த பதில் மனுவில், 293-வது ஆதீனம் என்று குறிப்பிட்டதை திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். ஏனென்றால், 292-வது ஆதீனம் இருக்கும்போதும், 293-வது ஆதீனம் என்று எப்படி குறிப்பிட முடியும்? என்று ஐகோர்ட்டு கேள்வி கேட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த போது பதில் மனு தாக்கல் செய்ய நித்யானந்தா தரப்பு வக்கீல் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

பதில் மனுவை தாக்கல் செய்யாமல், இழுத்தடிக்கும் நித்யானந்தாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடுவேன் என்றும் எச்சரிக்கை செய்தார்.

பின்னர், மதுரை ஆதீனத்துக்கு 2 ஆயிரத்து 500 ஆண்டுகால பாரம்பரியம் உள்ளது. அந்த மடத்தை பற்றியும், நித்யானந்தாவின் ஆன்மிகம் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, வருகிற புதன்கிழமைக்குள் நித்யானந்தா சரியான பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால், அவரை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்தார்.

அப்போது நித்யானந்தா தரப்பு வக்கீல், புதன்கிழமைக்குள் பதில் மனுவை தாக்கல் செய்துவிடுவோம் என்று கூறினார்.

இந்த நிலையில், இன்று மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி என கூறியதை திரும்ப பெறுகிறேன் என ஐகோர்ட்டில் நித்யானந்தா சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com