களைகட்டும் மகா சிவராத்திரி: சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள் - ஈஷா யோகா மையத்தில் பிரபலங்கள் பங்கேற்பு

கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது.
சென்னை,
நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரியையொட்டி இன்று இரவு தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிவராத்திரியையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் (முதல் ஜாமம் பூஜை மாலை 6 மணி முதல் இரவு 9மணி வரை) (2-ம் ஜாமம் பூஜை இரவு 9 மணி முதல் 12 மணி வரை) 3-ம் ஜாமம் பூஜை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 4-ம் ஜாமம் பூஜை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை ஆகிய 4 கால பூஜைகள் நடைபெறும்.பக்தர்கள் வாங்கி கொடுக்கும் அபிஷேக பொருட்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஜாமத்திலும் அபிஷேகங்கள் செய்யப்படும். விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
மகா சிவராத்திரி விழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சிவராத்திரியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பாலாடை அங்காள பரமேஸ்வரி கோவிலில் 1008 பால்குடம் எடுத்து பெண் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவை பட்டீஸ்வர சாமி கோவில், தஞ்சை பெரிய கோவில், நெல்லையப்பர் கோவில், ஸ்ரீரங்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், திருத்தணி வாரண்டே ஸ்வர சுவாமி கோவில், சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் ஆகிய கோவில்களில் மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், ஈஷா யோகா மையத்தில் 31வது ஆண்டு மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது. தலைமை விருந்தினராக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்றார். சத்குரு அவரை வரவேற்றார். தொடர்ந்து, ஈஷா யோகா மையத்தில் உள்ள சூரிய குண்டத்தில் அமித்ஷா வழிபாடு செய்தார். சூரிய குண்டத்தில் இறங்கி, நீரைத் தெளித்து வழிபட்டார். அதன்பின், 'பேட்டரி' வாகனத்தை சத்குரு இயக்க, முன்னிருக்கையில் அமித் ஷா அமர்ந்தார்.
பின்னர், லிங்க பைரவி தேவி சன்னதியில் உள்ள திரிசூலத்தை அமித் ஷா வழிபட்டார். மேலும், தியானலிங்கத்தில் சத்குரு நிகழ்த்திய பஞ்சபூத க்ரியாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து, அவர் 'மஹா யோகா யக்னா' தீபத்தை ஏற்றிய பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி துவங்கியது.
ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், ஒடிசா கவர்னர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய சட்ட மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், மராட்டிய நீர்ப்பாசனத் துறை மந்திரி சஞ்சய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுவை மந்திரி நமச்சிவாயம், அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நடிகர் சந்தானம், நடிகை தமன்னா, விஜய் வர்மா, ஓம்பிரகாஷ் மெஹ்ரா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும், இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிகள் விவரம்
ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மகா சிவராத்திரி விழா நாளை அதிகாலை 5.45 மணி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
மாலை 6 மணிக்கு பஞ்ச பூத கிரியா பூஜை
மாலை 6.15 மணி பைரவி மகா யாத்ரா
இரவு 7 மணி ஆதியோகி திவ்ய தரிசனம்
இரவு 7.15 மணி இசை, நடனம், மற்றும் கலை நிகழ்ச்சிகள்
இரவு 10.15 மணி சத்குருவின் சொற்பொழிவு மற்றும் நள்ளிரவு தியானம்
அதிகாலை 1.25 மணி இசை, நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்
அதிகாலை 3.40 மணி சத்குருவின் சொற்பொழிவு மற்றும் தியானம்
அதிகாலை 4.20 மணி இசை, நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்
அதிகாலை 5.45 மணி சத்குருவின் சொற்பொழிவுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.






