

சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்தாண்டு 9 கோவில்களில் மகா சிவராத்திரி பெருவிழா நடந்தது. அதேபோல், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை, மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.
மயிலாப்பூர் கபாலீசுவரர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், நெல்லை நெல்லையப்பர், பேரூர் பட்டீசுவரர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், திருவாரூர் தியாகராஜசாமி, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரசாமி ஆகிய 9 கோவில்களின் சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கூடுதலாக, ராமேசுவரம் ராமநாதசாமி, விருத்தாச்சலம் விருத்தகிரீசுவரர், திருநாகேசுவரம் நாகநாதசாமி ஆகிய 3 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடத்தப்பட உள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு 12 கோவில்களில் 15-ந்தேதி மாலை 6 மணி முதல் 16-ந்தேதி காலை 6 மணி வரை மகா சிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.