மகாகவி பாரதியார் நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ந்தேதி “மகாகவி நாள்”-ஆக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மகாகவி பாரதியார் நினைவு நாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
Published on

சென்னை,

மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார் 11.12.1882 அன்று தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் சின்னச்சாமி அய்யர் – இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எட்டயபுரத்தில் தொடக்கக் கல்வியை பயின்றார். தமது ஏழு வயதிலேயே அருமையான தமிழ்க் கவிதைகளை விரைந்து இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தார். 11 வயதில் பாரதி (கலைமகள்) என்று புலவர் பெருமக்களால் பட்டம் சூட்டப்பட்டது.

தமது 15 வயதில் தந்தையின் மறைவுக்குப் பிறகு சில காலம் காசிக்குச் சென்று ஜெய்நாராயண் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை நன்கு கற்று தேர்ந்தார். 1898-ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார். 1902-இல் எட்டயபுரம் அரசவையில் பாரதியார் மூன்றாண்டுகள் பணிபுரிந்தார்.

1904-இல் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், பின்பு ஜி.சுப்பிரமணிய அய்யர் அழைப்பின் பேரில் சென்னை வந்து “சுதேசமித்திரன்” பத்திரிகை உதவி ஆசிரியராகவும், ‘இந்தியா’ வார இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். மேலும் 1910-ஆம் ஆண்டு ‘கர்மயோகி’ எனும் மாத இதழை தமிழில் நடத்தினார்.

கவிதைகள், கட்டுரைகள்

தமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல் என்ற உறுதியோடு சுதேசமித்திரன், இந்தியா, சக்கரவர்த்தினி, பாலபாரதா போன்ற பல பத்திரிகைகள் மூலம் கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதி மக்கள் உள்ளங்களில் சுதந்திர தாகத்தை வளர்த்தார்.

தமது தாய்நாட்டை எண்ணிப் பெருமிதம் கொண்டதோடு, அதன் எதிர்காலம் குறித்த தெளிவான தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராகத் திகழ்ந்த மகாகவி பாரதி, "வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்", “பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்று பாடியதோடு ‘வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்’ என்று நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

பெண் விடுதலை

“ஆணும் பெண்ணும் நிகரெனக்கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்”, "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்", “பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா” என்று பெண்ணுரிமைக்காகவும், பெண் விடுதலைக்காகவும் முழக்கமிட்டவர் மகாகவி பாரதியார்.

மகாகவி பாரதியார் நூற்றுக்கணக்கான சிறு கவிதைகளோடு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலியின் சபதம் ஆகிய தொடர்கவிதைகளையும் எழுதியுள்ளார். சின்னச் சங்கரன் கதை, ஞான ரதம், சந்திரிகையின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளதோடு, தாகூரின் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

மகாகவி நாள்

மகாகவி பாரதியார் அவர்கள் 12.09.1921 அன்று மறைந்தார். மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவை நினைவு இல்லங்களாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ந்தேதி “மகாகவி நாள்”-ஆகக் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் “மகாகவி நாள்” ஆக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள் மரியாதை

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான மகாகவி நாளை முன்னிட்டு இன்று (11.9.2026) சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் த.சரத்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com