திருத்தணியில் மகாத்மா காந்தி சிலையை காமராஜர் மார்கெட் அருகில் நிறுவ வேண்டும் - ஜி.கே. வாசன்


திருத்தணியில் மகாத்மா காந்தி சிலையை காமராஜர் மார்கெட் அருகில் நிறுவ வேண்டும் - ஜி.கே. வாசன்
x

கோப்புப்படம் 

திருத்தணி மா.பொ.சி சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது என்று அகற்றப்பட்டது.

சென்னை

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி மா.பொ.சி சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது என்று அகற்றப்பட்டது. அப்பொழுது அச்சிலையை பெருந்தலைவர் காமராஜர் மார்கெட் அருகில் வைக்க த.மா.கா உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், பொது இயக்கங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

திருத்தணியின் அடையாளமாக திகழும் காந்தி சிலையை பெருந்தலைவர் காமராஜர் மார்கெட் அருகில் நிறுவ வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ், திருவள்ளுர் மத்திய மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் தமிழக நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சரையும், வருவாய் கோட்டாச்சியரையும், திருத்தணி நகராட்சி ஆணையரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. எனது சார்பில் பத்திரிகை வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வருவாய் கோட்டாச்சியர் திருத்தணி நகராட்சி ஆணையருக்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி சிலையை நிறுவுவதற்கான இடத்தை முடிவு செய்யும்படி ஆணையிட்டும் இதுவரை அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை, அதற்கான எந்த நடவடிக்கையையும் அரசு அதிகாரிகள் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

இனிமேலும் காலதாமதம் இல்லாமல் அகிம்சைக்கு எடுத்துக்காட்டாக உலகிற்கே வழிகாட்டிய பாரதப் பிதா காந்தியடிகளின் சிலையை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பெருந்தலைவர் காமராஜர் மார்கெட் அருகில் நிறுவ வேண்டும் என்று மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story