குரூப் 2 மற்றும் 2 ஏ பதவிகளுக்கு இன்று முதன்மைத் தேர்வு

குளறுபடிகளால் கடந்த மாதம் 8ஆம் தேதி ரத்தான தேர்வு இன்று (ஞாயிறு) நடத்தப்படுகிறது.
குரூப் 2 மற்றும் 2 ஏ பதவிகளுக்கு இன்று முதன்மைத் தேர்வு
Published on

சென்னை,

உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2025) ஜூலை மாதம் 15-ந்தேதி வெளியானது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 4 லட்சத்து 20 ஆயிரத்து 217 பேர் எழுதினார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்களாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு கடந்த மாதம் 8-ந்தேதி நடைபெற இருந்தது.

இதன்படி தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற இருந்தது. சென்னையில் 7 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், அரும்பாக்கம் மற்றும் நந்தனம் தேர்வு மையத்தில் குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து, குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று (மார்ச் 15) குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மை தேர்வு நடைபெறுகிறது. இன்று காலையில் தாள் ஒன்று தமிழ் மொழித் தகுதித் தேர்வு, தாள் இரண்டு பொது அறிவு, பொது நுண்ணறிவு, பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com