பாரம்பரிய நெல் விதைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை : வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

பாரம்பரிய நெல் விதைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தேனி வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்தார்.
பாரம்பரிய நெல் விதைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை : வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
Published on

தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் பாரம்பரிய நெல் விதைகளை இனத்தூய்மையுடன் விதை வங்கியில் பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 10 விவசாயிகளுக்கு தலா ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் 2023-24-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் குறைந்த பட்சம் 100 பாரம்பரிய நெல் ரகத்தை விதை வங்கியில் பராமரித்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்து வரும் நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரசாயனம் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபுசார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும்.

விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத் திறனுடன் இருப்பதை தொடர்ந்து உறுதி செய்திட வேண்டும். வயல்களில் உரிய அளவு சாகுபடி செய்திட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும். பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு அக்ரிஸ்நெட் என்ற இணையதளம் மற்றும் உழவன் செயலியில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தேனி வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சங்கர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com